
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்த மகாகும்பமேளாவிற்கு சென்று பீகாருக்கு திரும்பிக்கொண்டு வந்துக் கொண்டிருந்த கார் ஒன்று நிலைகொண்டிருந்த லாரியுடன் மோதி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து பீகார் மாநிலத்தின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அரா-மொஹனியா நான்கு வழிச் சாலையில், ஜகதீஷ்பூர் காவல் நிலையத்தின் அருகே உள்ள துல்ஹிங்கஞ்ச் பஜார் பகுதியில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்டவர்கள் பாட்னா நகரின் ஜக்கன்பூர் மற்றும் கும்ரார் பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு அறிக்கையின் படி, வாகன ஓட்டுநர் ஒரு நிமிடம் உறங்கியதாலும் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
விபத்திற்குப் பிறகு, அருகிலிருந்த எரிபொருள் நிலையத்திலிருந்து முதல் கட்ட மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. விபத்துக்குள்ளான பலேனோ கார் லாரியில் வேகமாக மோதியதால் 62 வயதான சஞ்சய் குமார், அவருடைய 58 வயது மனைவி கருணா தேவி, மகன் 25 வயது லால் பாபு சிங், மகள் 20 வயது பிரியம் குமாரி, மேலும் 28 வயது ஆசா குமாரி, 25 வயது ஜூஹி ராணி ஆகிய ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்திற்குப் பிறகு லாரி டிரைவர் மற்றும் உதவியாளர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ஜகதீஷ்பூர் காவல் ஆய்வாளர், “விபத்து நடந்த உடனே எங்களுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்தவர்களின் உடலை மீட்டோம். உடல்களை அரா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளோம். மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். விபத்து பாட்னா நகரின் ஜக்கன்பூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.