கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள டொரோண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் 4819 விமானம் தரையிறங்கும் போது கவிழ்ந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் இருந்த 80 பேரையும் அவசரகால மீட்பு குழுவினர் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றினர். சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காட்சிகளில், விமானம் தலைகீழாக விழுந்து பயணிகள் அவசர வெளியேற்றம் செய்யப்படுவதும், மீட்பு குழுவினர் தீவிரமாக செயல்படுவதும் காணப்பட்டது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது, அதில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விமானத்தில் 76 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் இருந்தனர். இது மின்னசோட்டாவின் செயின்ட் பால் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு டொரோண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி பயணித்தது. விமானம் தரையிறங்கியதும், அதன் இருக்கைகளும் உடைந்து விமானம் தலைகீழாக நிலைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துக்கான காரணம் இன்னும் உறுதியாக தெரியவில்லை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்காலிகமாக இரண்டு ஓடுபாதைகள் மூடப்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.