
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதுடைய மணிகண்டன் என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமை மதுராந்தகம் அருகே கீழவளம் ஏரியில் மீன் பிடிக்கும் போது உயிருடன் உள்ள ஒரு மீனை வாயில் வைத்ததனால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அரையப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இவர், தினமும் கூலி வேலை செய்யும் தொழிலாளி. வெறும் கைகளால் மீன் பிடிக்கும் பழக்கத்தால் பிரபலமாக இருந்த மணிகண்டன், நீர்மட்டம் குறைந்திருந்த ஏரியில் மீன் பிடிக்கச் சென்றிருந்தார்.
இந்நிலையில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென அவர் ஒரு மீனை பிடித்து அதனை உயிரோடு தன் வாயில் வைத்தார். அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். அதாவது அந்த மீன் கூர்மையான இறக்கைகளுடன் இருந்த நிலையில் வாயில் வைத்து அவரால் அதனை திரும்ப வெளியே எடுக்க முடியவில்லை. அவரின் அருகே இருந்தவர்களும் அந்த மீனை எடுக்க முயற்சி செய்த நிலையில் அவர்களால் முடியவில்லை.
உடனடியாக அவரை அருகில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். அவர் வாயில் வைத்தது பனங்கொட்டை மீன் என்று அழைக்கப்படுகிறது. இந்த இனத்தைச் சேர்ந்தது தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் அதிக வகையில் காணப்படும் நன்னீர் வகை மீனாகும். மேலும் இந்த மீன் நீர் இல்லாமல் ஈரப்பதத்தில் வாழக்கூடிய தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.