
இஸ்ரேல் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காசா மீது போர் தொடுத்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து லெபனான், ஏமன் மீதும் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அடுத்ததாக ஈரானை தாக்க திட்டமிட்டது. முன்னதாக ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து ஒரு வருடத்திற்கு மேலாக போர் நீடிக்கும் நிலையில் காசாவில் மனிதாபிமான உதவிகளை முற்றிலும் நிறுத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது மக்களை பட்டினி போட்டுக்கொல்ல இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு உலக நாடுகள் மற்றும் ஐநா சபை கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக போரில் துணை நிற்கும் அமெரிக்காவும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் வெளியிட்டுள்ள குறிப்பில், காசாவில் மனிதாபிமான உதவிகளை முற்றிலும் நிறுத்த இஸ்ரேல் முடிவு செய்தால் அமெரிக்கா வழங்கும் இராணுவ உதவிகள் நிறுத்தப்படும் என்று எச்சரித்தார். காசாவின் சில மனிதாபிமான உதவிகள் இருந்தாலும் அவை போதுமான அளவுக்கு இல்லை.
எனவே காசாவில் உடனடியாக மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் இதனை செய்து முடிக்காவிடில் கண்டிப்பாக அமெரிக்கா வழங்கி வரும் ராணுவ உதவிகள் முற்றிலும் நிறுத்தப்படும். மேலும் ராணுவ உதவிகள் நிறுத்தப்படுதல் உள்ளிட்ட விளைவுகளை இஸ்ரேல் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.