
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்த செங்கோட்டையன் சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் அதிமுக எம்எல்ஏக்களுடன் சேராமல் சபாநாயகர் அறைக்கு சென்றார். இது பற்றி எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டால் செங்கோட்டையனிடம் கேளுங்கள் என்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட செங்கோட்டையன் தற்போது தேர்தல் நெருங்குவதால் நான் அளந்து பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் என்றும் தலைமைக்கு உண்மையான உதாரணமே ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் தான் என்று கூறினார்.அதோடு சில வேடிக்கை மனிதர்களை போன்று நான் விழுந்து விட மாட்டேன் எனவும் கண்டிப்பாக என்னுடைய பாதை வெற்றியை நோக்கி தான் அமையும் என்றும் கூறினார்.
இதனால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையே பிரச்சனை இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழும் செங்கோட்டையனும் எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். அதன் பிறகு ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் பல வருடங்களாக முக்கிய புள்ளியாக இருக்கும் நிலையில் அவருடைய ஆதரவாளர்கள் பல பதவிகளில் இருக்கிறார்கள்.
ஆனால் கடந்த சில வருடங்களாக செங்கோட்டையன் ஆதரவாளர்களை புறக்கணித்துவிட்டு புதியவர்களை எடப்பாடி பழனிச்சாமி நியமிப்பதாக கூறப்படுகிறது. அதன் பிறகு தன்னுடைய மகன் கதிரீஸ்வரனுக்கு நாடாளுமன்ற எம்பி சீட் வேண்டுமென்று எடப்பாடி பழனிச்சாமியிடம் செங்கோட்டையன் கேட்ட நிலையில் அதற்கும் அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதைத்தொடர்ந்து கொடிவேரி அணைக்கருகே பவானி ஆற்றங்கரையில் தனியார் சாய ஆலை தொடங்க தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில் இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த விவகாரத்தில் மக்களுடன் செங்கோட்டையன் போராடி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இந்த விவகாரத்தில் தலையிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால்தான் இந்த பிரச்சனை தொடர்பாக சபாநாயகரை தனித்து சந்தித்து செங்கோட்டையன் மனு கொடுத்துள்ளார். தனி ஒருவனாக சாய ஆலை தொழிற்சாலைக்கு எதிராக மக்களோடு சேர்ந்து செங்கோட்டையன் போராடி வரும் நிலையில் இதற்கு அதிமுக முழு ஆதரவு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது போன்ற காரணங்களால் தான் செங்கோட்டையன் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுகவின் உண்மையான தொண்டனாக இருக்கும் செங்கோட்டையன் ஒருபோதும் கட்சியை விட்டு விலக மாட்டார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.