ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் தனது கணவரை இழந்த ஷீதல் கலாத்தியா, நாட்டை சோகத்தில் ஆழ்த்தும் வகையில் தனது அனுபவத்தை பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். தனது கணவர் ஷைலேஷ் கலாத்தியா வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளான பின், அவர் தன்னை காத்துக்கொண்டிருக்கும் குழந்தைகளை நினைத்து நடுங்கியிருந்ததாக கூறினார்.

“மினி ஸ்விட்சர்லாந்து என அழைக்கப்படும் பைசரானில் உள்ள புல்வெளிக்கு குழந்தைகளுடன் சென்றிருந்தோம். அங்கு 10-15 நிமிடங்கள் தான் இருந்தோம். திடீரென துப்பாக்கிச் சூடு தொடங்கியது. அருகிலிருந்த கடைக்காரர்கூட இது முதல் முறை தான் இப்படிச் சத்தம் கேட்கிறேன் என்று சொன்னார்,” எனக் கூறிய ஷீதல், அப்பொழுது பயங்கரவாதிகள் வந்து மத அடிப்படையில் குழுவை பிரித்து, இந்து மதத்தைச் சேர்ந்த ஆண்களை ஒரே நேரத்தில் சுட்டுத் தள்ளினர் எனவேதனையுடன் கூறினார்.

“என் கணவர் என் மடியில் படுத்திருந்தபோது, என் குழந்தைகளை பார்த்தேன். எனக்கு எதுவும் புரியவில்லை. நான்  கூச்சலிட்டேன், ‘யாராவது என் கணவரை காப்பாத்துங்க’ என்று. ஆனால் யாரும் வரவில்லை அவர் கூறினார்.

அதன் பின், அப்பகுதியிலிருந்து குழந்தைகளை மடியில் தூக்கிக்கொண்டு நடந்து தப்பித்ததாகவும் கூறினார். மேலும் அவர் கண்ணீர் மல்க பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது. மேலும் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் மொத்தம் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.