துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட அரசு விழாவில் இன்று தமிழ் தாய் வாழ்த்து தவறாக ஒளிபரப்பப்பட்ட நிலையில் இதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் மத்திய மந்திரி எல்.‌முருகன் ‌ உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட விழாவில் தமிழ் தாய் வாழ்த்து தவறாக ஒலிபரப்பப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று துணை முதல்வர் உதயநிதி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக ஒலிபரப்பப்பட்டது. இதனால் பாடலை நிறுத்திவிட்டு மீண்டும் பாடிய நிலையில் அடுத்த முறையும் தவறாகவே பாடினர்.

டிடி தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து தவறாக படிக்கப்பட்ட நிலையில் அதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்டாலும் கூட அதை விடாமல் முதல்வர் ஸ்டாலினும் துணை முதல்வர் உதயநிதியும், திமுகவினரும் எவ்வளவு கீழ்த்தரமான அரசியலை செய்தனர் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ரவியை பதவி விலக வேண்டும் என்று கூறினார். தற்போது தன்னுடைய புதல்வர் பங்கேற்ற விழாவில் தமிழ்தாய் வாழ்த்து தவறாக ஒலிபரப்பப்பட்டதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார். இதற்கு பொறுப்பேற்று உதயநிதி ஸ்டாலின் தானாக முன்வந்து பதவி விலகுவாரா.? அல்லது முதல்வர் ஸ்டாலினே அவரை பதவியிலிருந்து நீக்குவாரா என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.