ஆந்திர மாநிலம் ராஜமஹேந்திரவரத்தில் அனில் குமார் என்ற பிரபல ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரை ஆபாசமாக சித்தரித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதால், தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் புகார் செய்ததின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டார்.

சம்பவத்துக்குப் பின், விசாரணைக்காக அனில் குமாரை 3 நாட்கள் காவலில் எடுத்து போலீஸ் நிலையத்திலேயே ராஜ மரியாதையுடன் லாக்கப்பில் தனி படுக்கை ஏற்பாடு செய்து, ஓட்டலுக்கு அழைத்து மதிய உணவு சாப்பிட செய்ததாக தகவல் வெளியானது. மேலும், அனில் குமார் சத்தமாக போலீசாருக்கு உத்தரவிடும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு, இதன் அடிப்படையில், அனில் குமாருக்கு இந்த வகையான மரியாதையை வழங்கியதாக இன்ஸ்பெக்டரும் சப்-இன்ஸ்பெக்டர்களும் உட்பட 7 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை முடிவில் இறுதி அறிக்கை வந்தவுடன், அந்த அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.