
கரூர் மாவட்டத்தில் உள்ள கதர் மங்கலம் பகுதியில் செல்வகுமார் (27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருத்திகா (25) என்ற பெண்ணுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு புதுக்கோட்டையில் வசித்து வந்தனர். இதற்கிடையில் கிருத்திகா அடிக்கடி தன்னுடைய தாயாரை பார்க்க செல்வதாக கூறிவிட்டு கோவைக்கு சென்று வந்துள்ளார். இது தொடர்பாக கிருத்திகாவிடம் அவருடைய கணவர் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த 2023 ஆம் ஆண்டு கிருத்திகா தன் கணவரின் சொந்த ஊருக்கு சென்று பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் போன்றவற்றை எடுத்துச் சென்று விட்டார். இது தொடர்பாக செல்வகுமாரிடம் அவருடைய தந்தை கேட்டபோது தன்னுடைய மனைவிக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் செல்வகுமார் கோவைக்கு சென்று பார்த்த போது தன்னுடைய மனைவி வீட்டை காலி செய்து விட்டு சென்றது தெரிய வந்தது.
அதோடு கிருத்திகாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதும் தன்னுடைய முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெறாமலேயே 2-வது திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதையடுத்து திருமணத்தின்போது தான் கொடுத்த பணம் மற்றும் நகை போன்றவற்றை தன் மனைவியிடம் செல்வகுமார் கேட்டுள்ளார். இதனால் தன் கணவரை அவர் மிரட்டியதோடு நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கேட்டு புகார் கொடுத்துள்ளார். இதனால் அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் அவர் தன் மனைவி மீது மனு கொடுத்தார். இந்த மனு தொடர்பான விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளிவந்தது. மேலும் அதன்படி கிருத்திகாவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.