
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி கதாநாயகனாக கொடி கட்டி பறக்கும் ரஜினியை ரசிகர்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் தான் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் நடிகர் என்று தயாரிப்பாளர் தில் ராஜு கூறியது சர்ச்சையாக மாறிய நிலையில், வாரிசு இசை வெளியீட்டு விழாவின்போது நடிகர் சரத்குமார் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான் என்று கூறியிருந்தார். இதனால் தற்போது தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதம் ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டார் என்றும், விஜய் தான் தற்போது தமிழகத்தின் லேட்டஸ்ட் சூப்பர் ஸ்டார் என்றும் கூறியுள்ளார். இதை தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கூட ஏற்றுக் கொள்வார்கள் என்றும் கூறியிருந்தார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் பிஸ்மி அலுவலகத்தை முற்றுகையிட்டு மிரட்டும் தோணியில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தற்போது கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், பலரும் பிஸ்மிக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வருகிறார்கள். மேலும் இப்படி பெரிய பிரச்சனை நடந்து கொண்டிருக்கும்போது இதைப்பற்றி ரஜினி மற்றும் விஜய் இருவருமே கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.