
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குவதாக சமீபத்தில் அறிவித்தது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு விமர்சித்த விதம் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது தனக்கு முஸ்லிம்களின் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி விஜய் பாதுகாப்பு பெற்றதாக வன்னியரசு கூறியுள்ளார். இதற்கு தமிழக வெற்றி கழகம் தற்போது பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் தாஹிரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இஸ்லாமியர்கள் அச்சுறுத்தல் எனக் கூறி எங்கள் தலைவர் பாதுகாப்பு பெற்றதாக தொலைக்காட்சி ஊடக விவாதத்தில் சகோதரர் திரு வன்னியரசு அவர்கள் கூறியிருப்பதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் கழகத்தின் மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளராக என்னை எங்கள் தலைவர் நியமித்துள்ளார்.
கழகத்தின் முக்கிய பொறுப்புகளில் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் எங்கள் தலைவர். கல்வி விருது வழங்கும் விழாவில் இஸ்லாமிய மாணவர்களை கௌரவித்தவர் விஜய். CAA சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக விஜய் நிற்கிறார். எங்கள் தலைவரை நீங்கள் அப்பட்டமான பொய்யின் மூலம் விமர்சித்துள்ளீர்கள். இதனால் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள் போன்று சித்தரித்துள்ளீர்கள். இதற்கு என்னுடைய வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். திமுகவின் ஊதுகுழலாக இத்தகைய பொய்யை சர்வ சாதாரணமாக பேசும் நீங்கள் உங்கள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கும் அவப்பெயரை தேடி தந்துள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். மேலும் இஸ்லாமிய மக்களை தன்னுடைய நெஞ்சில் வைத்து மதிப்பவர் எங்கள் தலைவர் விஜய் என்று கூறியுள்ளார்.