
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மெட்ரோ சிட்டியை சேர்ந்த வக்கீல் கிருஷ்ணகுமார் என்பவரின் பெரியம்மா இந்திராணி. 83 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக கடந்த ஜூலை 5ஆம் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து அவருடைய உடலுக்கு திராவிட கழகத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் அஞ்சறை செலுத்தியதோடு மட்டுமல்லாமல் இறுதி சடங்கு களுக்காக மூதாட்டி உடலை மின் மயானத்திற்கு எடுத்து செல்ல தயாராகினர். ஏராளமான பெண்கள் திரண்டு மூதாட்டி உடலை வீட்டிற்கு வெளியே கொண்டு வந்து அங்கிருந்து ஆம்புலன்ஸில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டு சென்றனர்.
பிறகு மின் மயானத்திலிருந்து மூதாட்டி உடலை ஆம்புலன்ஸ் வாகனத்திலிருந்து எரியூட்டு மையம் வரை எடுத்துச் சென்று உடலை வைத்து எரியூட்டினர். வழக்கமாக மின் மயானத்திற்கு ஆண்கள் மட்டுமே சென்று இறந்தவர்களின் இறுதி சடங்கை செய்யும் நிலையில் உயிரிழந்த மூதாட்டி உடலை வீட்டில் இருந்து மின் மயானம் வரை கொண்டு சென்று இறுதி சடங்குகள் செய்து மின் மயானத்தில் எரியூட்டும் வரை காத்திருந்து ஆண்கள் செய்யும் நடைமுறை வழக்கத்தை மாற்றி பெண்கள் செய்துள்ளனர். இவர்கள் செய்த இந்த செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.