தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானோர் பலியான நிலையில் தமிழகம் முழுவதும் போதை பொருள் தொடர்பாக அதிரடி சோதனைகள் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் போதை பொருள் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கான சிறை தண்டனை மற்றும் அபராத தொகையை உயர்த்தி புதிய மசோதா நிறைவேற்றியுள்ள நிலையில் போதை பொருள் தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மற்றும் வீட்டில் கஞ்சா உள்ளிட்ட போதை செடிகளை வளர்ப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்றும் புதிய விதி நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலுள்ள எலத்தூர் செட்டிபாளையம் அருகே ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி கோபி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் மூலிகை செடிகளுக்கு நடுவில் கஞ்சா செடி இருப்பது தெரிய வந்தது. அங்கு சுமார் 11 கஞ்சா செடிகள் இருந்த நிலையில் அவற்றை காவல்துறையினர் அழித்தனர். அதன்பிறகு அதனை வளர்த்து வந்த சித்த வைத்தியரான மாரப்பன் (80) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவருக்கு துணையாக இருந்த அவருடைய மகன் கருப்பசாமியையும் (45) காவல்துறையினர் கைது செய்தனர்.