
சென்னை பழவந்தாங்கல் ரயில்வே நிலையத்தில் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை மாநகர காவல் நிலையத்தில் 25 வயது மதிக்கத்தக்க பெண் போலீஸ் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் பணி முடிந்த பிறகு எழும்பூரில் இருந்து பழவந்தாங்கலுக்கு மின்சார ரயிலில் சென்றார். இவர் நடைமேடையில் இறங்கி தன்னுடைய வீட்டுக்கு இருள் சூழ்ந்த பாதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு மர்ம நபர் பின் தொடர்ந்துள்ளார்.
இதனால் அந்தப் பெண் போலீஸ் அங்கிருந்து பயந்து போய் வேகமாக நகர ஆரம்பிக்க அந்த நபர் அவரை பின்பக்கமாக வாயை பொத்தி கீழே தள்ளி விட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அந்த நபரின் கையைப் பிடித்து அந்தப் பெண் கடித்த நிலையில் கத்தி கூச்சலிட அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அந்த நபரை சரமாரியாக அடித்த பொதுமக்கள் அவரை குண்டுகட்டாக தூக்கி சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் சத்யபாலு என்பதும் மது போதையில் இருந்ததும் தெரிய வந்தது.
இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதாவது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும் கண்டனம் தெரிவித்த அறிக்கை வெளியிட்டுள்ளார். இது பற்றி எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அதே பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்மநபர்கள் வலம் வருவதாக செய்திகள் வருகின்றன. பெண் காவலருக்கே பொது இடத்தில் இப்படியொரு கொடுமை நடக்கிறது என்றால், ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்கு எள்ளளவும் பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை.
பொது இடத்தில் நடைபெறும் பாலியல் அத்துமீறலும், ஆயுதக் கலாச்சாரமும் தனிப்பட்ட விஷயங்கள் என்று இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு கடக்க முனைவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவையெல்லாம் சட்டம் ஒழுங்கில் தான் வரும் என்பதாவது இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் திரு. ஸ்டாலினுக்கு தெரியுமா? பெண் காவலர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தமிழ்நாடு முழுக்க தலைதூக்கியுள்ள ஆயுதக் கலாச்சாரத்தை ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோன்று டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு – பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பது எப்போது ? சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் போதை ஆசாமி ஒருவர் செயினை பறிக்க முயற்சி செய்ததோடு, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவும் தமிழகத்தை பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மேடைக்கு மேடை முழங்குவது வெட்கக் கேடானது.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறித்து இதுவரை வாய் திறக்காத முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், தன் துறை சார்ந்த பெண் காவலரிடமே நடைபெற்றிருக்கும் அத்துமீறல் தொடர்பாக வாய் திறப்பாரா ? அல்லது எப்போதும் போல மவுனம் காக்க போகிறாரா ? குற்றச் சம்பவங்களை தடுத்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறியதன் விளைவு தற்போது அத்துறையைச் சார்ந்த பெண் காவலர் ஒருவருக்கே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளதோடு ஒட்டுமொத்த காவல்துறை மீதான மக்கள் வைத்திருக்கும் நன்மதிப்பையும் இழக்கச் செய்திருக்கிறது. எனவே, இனியாவது தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தன் கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதோடு, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.