ஊழியரின் தற்கொலைக்கு காரணமான தனியார் நிதி நிறுவன மேலாளரை கைது செய்ய வலியுறுத்தி மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் தாலுகா மேட்டூர் அடுத்த புது காலனியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனலட்சுமி கார்டன் பகுதியில் இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் பணி தொடர்பான பிரச்சனையில் அருண்குமாரை நிதி நிறுவன மேலாளர் தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அருண்குமார் மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அருண்குமாரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் மேலாளர் வெங்கடேசனை கைது செய்ய வலியுறுத்தி அருண்குமாரின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.