தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏகே கமல் கிஷோர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், உணவு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும்.

தமிழ் அல்லாது பிற மொழியையும் சேர்க்கும் பட்சத்தில் தமிழ் முதன்மையாகவும் பெரிதாகவும் போதிய இடைவெளியுடன் மற்ற மொழிகளை விட பார்வைக்கு மேலோங்கியும் இருப்பது அவசியம். ஆங்கிலம் இரண்டாவதாகவும் பிற மொழிகள் அடுத்தடுத்ததாகவும் இடம் பெறலாம்.

தமிழில் பெயர் பலகை இருப்பதை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொழிலாளர் துறை, தமிழ் வளர்ச்சி துறை, உள்ளாட்சி அமைப்புகள் மாவட்ட அளவிலான வணிகர் சங்கங்கள், உணவக உரிமையாளர்கள் சங்கங்கள், வேலை அளிப்போர் சங்கங்கள் ஆகியோரை கொண்டு மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

எனவே 100 சதவீதம் தமிழில் பெயர் பலகை அமைப்பதற்கு ஒத்துழைப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மே 2-வது வாரத்திற்குள் 100% தமிழில் பெயர் பலகை வைப்பதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனையும் மீறி தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.