கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் வெட்டுமணியில் குழித்துறை நகராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு சுகாதார அலுவலகம், இ-சேவை மையம் போன்ற அலுவலகங்களும் இருக்கிறது. நேற்று முன்தினம் ஊழியர் தனது மோட்டார் சைக்கிளை நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே வந்தார். அவர் மோட்டார் சைக்கிள் சாவியை எடுப்பதற்கு மறந்து விட்டார். இதனையடுத்து மாலை வேலை முடிந்த பிறகு அந்த ஊழியர் மோட்டார் சைக்கிள் நோக்கி நடந்து வந்தார்.

அப்போது ஒரு குரங்கு சத்தம் போட்டவாறு மோட்டார் சைக்கிள் சாவியை எடுத்துவிட்டு அங்கிருந்து துள்ளி குதித்தவாறு ஓடியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர் குரங்கிடமிருந்து சத்தம் போட்டும், சைகை காட்டியும் சாவியை வாங்க முயற்சி செய்தார். இதனையடுத்து பொதுமக்களும், நகராட்சியில் உள்ள பிற ஊழியர்களும் சாவிக்கொத்தை வாங்க முயற்சி செய்தனர். ஆனால் குரங்கு அவர்களை கண்டு கொள்ளவில்லை.

ஒரு கட்டத்தில் அங்கு நின்றவர்கள் கட்டையை எடுத்து குரங்கு இருந்த பகுதியை நோக்கி வீசினர். அதனை பொருட்படுத்தாமல் மர கிளையில் தாவி குதித்து சாவிக்கொத்தை அவர்களை பார்த்து ஆட்டியவாறு குரங்கு போக்கு காட்டி சேட்டைகள் செய்தது. ஒரு கட்டத்தில் குரங்கு கையில் இருந்த சாவிக்கொத்தை அந்த ஊழியர் நோக்கி அலட்சியமாக வீசி எறிந்து விட்டு மர கிளைகளில் தாவி குதித்து அங்கிருந்து சென்றது. பின்னர் பொதுமக்களும் குரங்கின் சேட்டைகளை ரசித்தவாறு அங்கிருந்து கலைந்து சென்றனர்.