கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாவரக்கரை கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்கிறார். இவருக்கு திவ்யா ஸ்ரீ(10) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி தாவரகரை பகுதியில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இன்று காலை திவ்யா ஸ்ரீ கழிப்பறை அருகே சென்ற போது அங்கிருந்த மின் வயரை தொட்டுள்ளார். இதனால் சிறுமியின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது வீட்டின் அருகே இரவு நேரங்களில் யானை வராமல் இருப்பதற்காக கிருஷ்ணன் மின்விளக்கு அமைத்துள்ளார். அதில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. அதை அறியாமல் திவ்யாஸ்ரீ தொட்டதால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.