காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்தவர் பாலாஜி. இவர் ஒரகடத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம் பெண்ணும் பாலாஜியும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் பாலாஜிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமானதாக தகவல் வந்தது. இதனால் இளம்பெண் பாலாஜியுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். கடந்த 6-ஆம் தேதி அந்த இளம் பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இதனை அறிந்த பாலாஜி மாப்பிள்ளையின் வீட்டிற்கு சென்று இளம்பெண் காதலிக்கும் போது தன்னுடன் எடுத்த புகைப்படங்களை அவரிடம் காட்டியுள்ளார். இதனால் இளம்பெண்ணின் திருமணம் நின்று போனது.

மேலும் பாலாஜி அந்த பெண்ணை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நீ யாரை வேண்டுமானாலும் திருமணம் செய். ஆனால் எனது ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டி உள்ளார்.

அப்படி இல்லையென்றால் என்னுடன் எடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன் என அந்த பெண்ணின் ஊருக்கு நேரடியாக சென்று மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பாலாஜியை கைது செய்து நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.