
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காதலனுடன் தனியாக இருந்த மாணவியை ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பிரியாணி கடை வியாபாரியான ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி மற்றொருவருடன் தனியாக இருக்க வேண்டும் என மாணவியை மிரட்டியது முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்துள்ளது. அந்த மற்றொருவர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஞானசேகர் மாணவியை மிரட்டிய போது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபரிடம் மாணவியை மிரட்டி கொண்டிருக்கிறேன் சார் என ஞானசேகர் கூறியதாக தெரிகிறது. இதனால் யார் அந்த சார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.