நாட்டில் யுபிஐ வழியாக ரூ.2,000-ஐ கடந்த பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படலாம் என வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பல ஊடகங்களில் இன்று வெளியான செய்திகளில், உயர்வான யுபிஐ பரிவர்த்தனைகள் மீது 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும் திட்டம் பரிசீலனையிலுள்ளது என கூறப்பட்ட நிலையில், இதனை நிதியமைச்சகம் முற்றிலும் மறுத்துள்ளது. “இது தவறானதும், வழிமுறை சார்ந்த ஆதாரமற்ற செய்தியும் ஆகும்” எனவும், தற்போது அரசின் முன் இதுபோன்ற எந்தவொரு திட்டமும் இல்லை என்றும் நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

நிதியமைச்சகம் மேலும் கூறியதாவது, தற்போது யுபிஐ வழியாக நடைபெறும் Person-to-Merchant (P2M) பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதமான Merchant Discount Rate (MDR) கட்டணமும் இல்லை என்பதால், ஜிஎஸ்டி விதிக்கும் நிலையும் இல்லை. 2020 ஜனவரி முதல் இது நடைமுறையில் உள்ளது. யுபிஐ பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க அரசு 2021-22 ஆண்டிலிருந்து ஊக்கத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தத் திட்டத்திற்கு ரூ.1,389 கோடி முதல் ரூ.3,631 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டு, சிறிய வர்த்தகர்களுக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. 2023-ல் உலகளாவிய நேரடி பரிவர்த்தனைகளில் 49% இந்தியாவால் நடைபெற்று, டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் முன்னணி நாடாக திகழ்ந்துள்ளது. மேலும் இதன் மூலம் யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்பது தெளிவாகியுள்ளது