
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை நடந்து கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் இபிஎஸ் கைக்கு அதிமுக சென்றுவிட ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவி வகித்து வரும் நிலையில் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தேர்தல்களிலும் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று ஓபிஎஸ் சமீப காலமாக தெரிவித்து வருகின்றார்.
இப்படியான நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடாக உள்ளது. பாஜகவுடன் கூட்டணியில் இருந்த சமயத்தில் அமித்ஷா என்னையும் எடப்பாடி பழனிச்சாமியையும் அழைத்து இவர்களுடன் ஒன்றிணைந்தால் கட்சி மேலும் வலுப்பெறும் என ஆலோசனை வழங்கினார். அதையெல்லாம் அன்று கேட்காததால் தான் இன்று எடப்பாடி பழனிச்சாமி அதற்கான பலனை அனுபவித்து வருகிறார். அதிமுக ஒன்றிணைய தொடர்ந்து போனில் பேச்சுவார்த்தை நடத்தி தான் வருகின்றேன். ஆனால் அந்த ரகசியத்தை எல்லாம் வெளியில் சொல்ல முடியாது. அப்படி வெளிப்படையாக சொன்னால் அது அதிமுக இணைப்புக்கு தடையாக இருக்கும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.