
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற 30ஆம் தேதி நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு தேவருக்கு மரியாதை செலுத்த உள்ளார். இதற்காக வருகிற 29ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமியின் மதுரைக்கு வருகை புரிகிறார். அவர் மதுரைக்கு வருவதை முன்னிட்டு செல்லூர் ராஜு தலைமையில் முன்னதாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எப்படி உற்சாக வரவேற்பு கொடுப்பது என்பது குறித்து பல்வேறு முடிவுகளை எடுத்தனர்.
இந்நிலையில் தற்போது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளுமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு அவருடைய கட்சி நிர்வாகிகள் ரத்தத்தில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். அதாவது ஆர்.பி உதயகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் ரத்தத்தில் கைநாட்டு வைத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் இது குறித்த புகைப்படம் தற்போது மிகவும் வைரலாகி வரும் நிலையில் ரத்தத்தில் அதிமுக நிர்வாகிகள் உருகி எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.