
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலக தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படும் நிலையில் ஏற்கனவே பாகிஸ்தான் அமைச்சரும் 30 வருடங்களாக தீவிரவாதிகளுக்கு பயிற்சி வழங்குவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அதே சமயத்தில் பாகிஸ்தான் இந்த தாக்குதலை நாங்கள் செய்யவில்லை என்று மறுத்து வருகிறது. அதன் பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியதால் பாகிஸ்தான் கோபத்தில் சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்துள்ளது. இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் காஷ்மீர் முன்னாள் பிரதமர் மெகபூபா முப்தி இந்த விவகாரம் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை தங்களுடைய ரத்தத்தை கொடுத்து காப்பாற்றியது முஸ்லிம்கள் தான். தீவிரவாத தாக்குதலின் போது காயமடைந்த சுற்றுலா பயணிகளை மீட்டு தங்கள் ரத்தத்தை கொடுத்து காஷ்மீர் முஸ்லிம்கள் தான் காப்பாற்றியுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்களை பல மைல் தூரம் நடந்து சென்று காப்பாற்றிய சஜ்ஜாத் பற்றியோ, டாக்ஸி ஓட்டுநர் குறித்தோ, சுற்றுலா பயணிகளை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த குதிரை வீரர் அதில் ஷா பற்றியோ யானும் பேசவில்லை. இவர்கள் அனைவருமே முஸ்லிம்கள்தான். நாங்கள் அனைவரும் காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல. பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது. மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் கொடூரமாக தாக்கப்படும் நிலையில் ஒவ்வொரு இந்துவும் தான் அந்த தாக்குதலை நடத்துவதாக கூற முடியாது என்று கூறினார்.