டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 21 வருடங்களுக்கு பிறகு ஆட்சி அமைத்துள்ளது. டெல்லியின் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி டெல்லியில் பாஜக சார்பில் ரம்ஜான் மாத இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடந்த நிலையில் அதில் முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது முதல்வர் ரேகா குப்தா செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

அதாவது, இஸ்லாமியர்கள் பண்டிகையான ரம்ஜானில் ராம் என்ற இந்து பெயரும் இந்துக்கள் பண்டிகையான தீபாவளியில் அலி என்ற முஸ்லிம் பெயரும் இருப்பதாக அவர் கூறினார். அதாவது Ramzan (Ram), Diwali (ALi) என்ற அர்த்தத்தில் அவர் கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் சிலர் முதல்வர் ரேகா குப்தாவுக்கு ஆதரவாகவும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். மேலும் இதற்கிடையில் முதல்வர் ரேகா குப்தா இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் நம்முடைய சகோதர சகோதரிகளுடன் மத நல்லிணக்க உறவை பேணும் வாய்ப்பு கிடைத்ததாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.