இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக மத்திய ரயில்வே அமைச்சகம் செயல்பட்டு வருகின்றது. தினந்தோறும் அதிக அளவிலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் ரயில் போக்குவரத்து குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக இருக்கும் என்பதால் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். புறநகர் பகுதிகளில் பணிபுரிபவர்கள் முதல் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் வரை அனைவரும் முதலில் விரும்புவது ரயில் போக்குவரத்தை மட்டும் தான்.

இதனிடையே நீண்ட தூரம் பயணம் மேற்கொள்பவர்கள் தங்களின் பயண நாளுக்கு முன்னதாக டிக்கெட்டை முன்பதிவு செய்து இருக்கையை உறுதி செய்வார்கள். ஆனால் திடீரென சில காரணங்களால் திட்டமிட்டபடி பயணிக்க முடியாத சூழல் ஏற்படும் பட்சத்தில் அந்த முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வீணாகிறது. இதற்கு ரயில்வே அமைச்சகம் மாற்று வழியை வைத்துள்ளது. அதாவது முன்பதிவு செய்தவரின் குடும்ப உறுப்பினர் யாராவது அந்த டிக்கெட்டில் பயணிக்கலாம்.

அதற்கு முன்னதாக பயண நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு அருகில் உள்ள ரயில்வே நிலைய கவுண்டரில் இதற்கான படிவத்தை பெற்று மாற்றாக பயணிக்க உள்ள நபர் குறித்த விவரங்கள் மற்றும் அவரின் ஆதார் நகல் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இந்த வசதியை ரயில் பயணிகள் பலரும் அறியாமல் இருக்கும் பட்சத்தில் இதனை முடிந்த அளவிற்கு அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.