
மத்திய அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் கல்விக்கான 2000 கோடி நிதியை விடுவிப்போம் என்று கூறிவிட்டது. ஆனால் தமிழக அரசு அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் என்றென்றும் இருமொழிக் கொள்கை மட்டும் தான் தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் என்று கூறிவிட்டதோடு கல்விக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக திமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் திமுக மாணவர் அணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் முன்பாக ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் ஹிந்தியை மட்டும் கருப்பு மையினால் அழித்து திமுகவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தமிழ் வாழ்க என்று முழக்கமிட்டபடியே கருப்பு மை கொண்டு அந்தப் பெயர் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துக்களை அழித்தனர்.