
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ரஷ்யாவுக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான மரியாதை வழங்கப்பட்டதோடு ராணுவ அணிவகுப்பு வரவேற்பும் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடியை புகழ்ந்து அதிபர் புதின் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக நரேந்திர மோடி தன்னுடைய பல வருட கடின உழைப்பின் மூலமாகத்தான் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதாக அதிபர் புதின் கூறினார்.
இந்நிலையில் நேற்று பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் மிக உயரிய விருதை வழங்கி அதிபர் புதின் கௌரவித்தார். அதாவது பிரதமரின் பயணத்தின் முடிவில் ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ விருது வழங்கப்பட்டது. இது ரஷ்ய குடிமகனுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். இந்த விருதை அதிபர் புதின் எழுந்து நின்று பிரதமர் மோடிக்கு அணிவித்து கௌரவித்தார். இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி இந்த விருது எனக்கு மட்டும் கிடைத்தது கிடையாது. 140 கோடி இந்தியர்களுக்கு கிடைத்த விருது. மேலும் பல நூற்றாண்டுகளாக தொடரும் ஆழமான நட்புக்கு கிடைத்த விருது என்று பதிவிட்டுள்ளார்.