சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கி இன்று வெள்ளித்திரையில் தமிழ் சினிமாவே வியக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் நடிகர்தான் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் உலக அளவில் சுமார் 340 கோடி வசூல் செய்து சிவகார்த்திகேயனை கோலிவுட்டின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எங்கேயோ சென்றுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது எஸ்கே 23 மற்றும் பராசக்தி ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில் சிவகார்த்திகேயனும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இன்று அவருடைய படங்களின் அப்டேட்டுகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தற்போது ஒரு படத்திற்கு 50 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் சிவகார்த்திகேயனின் மொத்த சொத்து மதிப்பு 120 முதல் 150 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. இவருக்கு சென்னையில் சொந்தமாக பல கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பங்களாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.