
திருவள்ளூர் மாவட்டத்தில் குமார் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி பானுமதி (45) என்ற மனைவி இருக்கிறார். இதில் குமார் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வலது கழுத்து பகுதியில் ஒரு கட்டி இருந்துள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளான குமார் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் மருத்துவமனையில் உள்ள ஐந்தாவது மாடியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தான் சிகிச்சை பெற்று வந்த வார்டின் ஜன்னல் அருகே வந்தார்.
பின்னர் திடீரென அவர் அங்கிருந்து கீழே குதித்து விட்டார். இதில் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவரை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் கழுத்தில் உள்ள கட்டியால் மிகவும் அவதிப்பட்டு வந்த நிலையில் அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.