
மும்பையில் கடந்த 13ஆம் தேதி வீசிய புழுதி புயலில் ராட்சத விளம்பர பலகை கீழே விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு 70-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தது.
இந்த விளம்பர பலகையை உரிய அனுமதி இன்றி ஈகோ டிஜிட்டல் நிறுவனம் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் வைத்திருந்தது. அதோடு இந்தியாவின் உயரமான விளம்பர பலகை அதுதான் என்றும் அதில் விளம்பரப் படுத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்த அந்நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான பாவேஷ் சிண்டே தலைமறைவானார். அவர் மீது வழக்கு பதிவு செய்து மும்பை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், தற்போது உதய்பூரில் வைத்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது ஏற்கனவே ஒரு பாலியல் வழக்கு உட்பட 20 வழக்குகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.