சென்னை நகரத்தில் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும், விபத்துகளை குறைக்கவும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட நவீன கேமராக்கள் பெருமளவில் பொருத்தப்படுகின்றன.

முதற்கட்டமாக இவிஆர் சாலை, அண்ணாசாலை, மின்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 200 கேமராக்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, மேலும் 200 கேமராக்களை நகரத்தின் பல்வேறு பகுதிகளில் விரைவில் பொருத்த போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த கேமராக்கள், வாகன ஓட்டிகள் விதிமீறல் செய்வதை தானாகவே அடையாளம் கண்டு, புகைப்படம் எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. அதனை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த வாகன ஓட்டிகளின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அபராத அறிவிப்பும் அனுப்பப்படுகிறது.

மேலும், ரேடார் பொருத்தப்பட்ட வாகனங்களிலும் 360 டிகிரி வீதியைக் கவனிக்கக்கூடிய அதிநவீன கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை சாலைகளில் சுழன்று விபத்துக்காரணமாக இருக்கக்கூடிய விதிமீறல்களை பதிவு செய்து, தொடர்புடையவர்களுக்கு அபராதம் விதிக்கின்றன.

இந்த கேமராக்களின் துல்லிய செயல்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு துணை கொண்டு, விதிமீறல்களில் ஈடுபடுவோர் தப்பிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஊட்டும் வகையில் இருந்து, வாகன ஓட்டிகள் தங்களது பொறுப்பை உணர்ந்து விதிமீறல்களில் ஈடுபடாமல் செயற்படுவார்கள் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.