
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தோட்டமூலா பகுதியில் உம்மு சல்மா (34) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 42 சென்ட் நிலத்தை வரையறை செய்வதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு கூடலூர் தாசில்தாரை அணுகியுள்ளார். இதற்காக அவர் விண்ணப்பித்த நிலையில் ரூ.820 கட்டணமும் செலுத்தியுள்ளார். ஆனால் இந்த தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால் கடந்த மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உம்மு சல்மா வழக்கு தொடர்ந்து நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிலத்தை வரையறை செய்ய வேண்டும் என தாசில்தாருக்கு உத்தரவிட்டது.
ஆனால் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தாசில்தார் ராஜேஸ்வரி பின்பற்றவில்லை. அவர் மொத்தம் ரூ. 2 கோடி சொத்தை நில அளவீடு செய்வதற்கு ரூ.2 லட்சம் வரை லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் அந்த பணத்தை அவர் கொடுக்காததால் இறுதியாக ரூ.50,000 கேட்டுள்ளார். ஆனால் அந்த பணத்தை கொடுக்க உம்மு சல்மாவுக்கும் விருப்பம் இல்லாததால் அவர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நேற்று ரசாயனம் தடவிய ரூ.20,000-ஐ கொடுத்து அனுப்பினார். இந்த பணத்தை நேற்று காலை ராஜேஸ்வரி வாங்கும்போது அவரை கையும் களவுமாக காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.