தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், புதிய நகைகள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மருத்துவம், கல்வி போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக தங்களிடம் உள்ள நகைகளை வங்கிகளில் அடகு வைத்து பணம் பெறுவது ஒரு வழியாக பலர் நாடி வருகின்றனர். இந்தப் பின்னணியில், கடந்த 5 ஆண்டுகளில் நகை கடன்கள் 300% வரை அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஆனால், தற்போது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நகை அடகு கடனுக்கான விதிமுறைகள் கடுமையாக மாற்றப்பட்டுள்ளன. இதன்படி, ஒருவருக்கு ஒரு வருடம் முடிந்ததும் வட்டியைக் கட்டி மட்டும் நகையை மீட்டுவைத்து மறுமுறை அடகு வைக்க முடியாது. இதற்கு பதிலாக, வட்டி மற்றும் அசல் இரண்டையும் செலுத்திய பிறகு மறுநாளிலேயே மறு அடகு வைக்க முடியும் என ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடை விதித்துள்ளது. இதனால் ஏழை மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலைமையில், கூட்டுறவு வங்கிகள் நகை கடன் பெற விரும்பும் மக்களுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளன. 2 லட்சம் ரூபாய்க்குள் நகை கடன் பெற்றவர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை வட்டியை கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் அதற்கு மேல் நகை கடன் பெற்றவர்கள் மாதந்தோறும் வட்டியை கட்ட வேண்டும் என கூட்டுறவு வங்கிகள் அறிவித்துள்ளன. இதனால் பலரும் கூட்டுறவு வங்கிகளை நாடி நகை கடன்கள் பெறத் தொடங்கியுள்ளனர்.