
பெங்களூருவைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர், இந்தியாவில் வாழ்வது குறித்த தனது சந்தேகங்களை Reddit தளத்தில் பகிர்ந்துள்ளார். ஆண்டுக்கு சுமார் ரூ.60 லட்சம் குடும்ப வருமானம் இருந்தும், நாட்டில் நிலவும் மோசமான வாழ்க்கை தரம் குறித்து தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
“ஆவணங்களில் நாங்கள் நன்றாக இருக்கிறோம். ஆனால் வாழ்க்கையின் தரம் கேள்விக்குறியாக உள்ளது,” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். பேங்கலூரின் ஹோரமாவு பகுதியில் வசிக்கும் அவர், 3 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 40 நிமிடங்கள் ஆகிறது.
சேதமடைந்த சாலைகள், கிடப்பில் போடப்பட்ட கட்டுமான வேலைகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியாவில் செலுத்தும் அதிக வரிகளை விமர்சித்த அவர், “30-40% வருமானம் வரியில் செல்கிறது, ஆனால் பதிலுக்கு எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை” என வேதனை தெரிவித்துள்ளார்.
கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளில் கிடைக்கும் இலவச சுகாதாரமும் தரமான கல்வியும் இந்தியாவில் கிடைக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். தூசி, சத்தம், சாலை கோபம் ஆகியவை வாழ்வின் தரத்தை பெரிதும் பாதித்துள்ளதாகவும், மாலை 7 மணிக்கு பிறகு தன் மனைவியை தனியாக வெளியே அனுப்ப தயங்குவதாகவும் கூறியுள்ளார்.
இளைஞரின் இந்த மனநிலை சமூக ஊடகங்களில் விரைவாக பரவியதோடு, பலரும் அவருக்கு வெளிநாடுகளுக்கு இடம்பெயர ஆலோசனை வழங்கியுள்ளனர். “இங்கே வாழ்க்கை தரத்தில் விரைவாக மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. உங்கள் எதிர்காலத்திற்காக சிறந்த சூழலை தேடி செல்லுங்கள்” என்று பலர் கருத்து தெரிவித்தனர்.
சிலர், இந்தியாவின் நிர்வாக அமைப்பில் அடிப்படை மாற்றங்கள் இல்லாமல் வாழ்வின் தரம் மேம்பட வாய்ப்பில்லை என்றும், “இப்போது நீங்கள் முயற்சி செய்தால், உங்கள் எதிர்கால சந்ததிகள் சிறந்த வாழ்க்கையை காண முடியும்” என்றும் பரிந்துரை செய்துள்ளனர்.