உச்சநீதிமன்றத்தில் ஒரு விவாகரத்து தொடர்பான வழக்கில் ஜீவனாம்சம் குறித்த பிரச்சனை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கணவன் மனைவி இருவரும் ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார்கள். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற நிலையில் மனைவிக்கு கணவர் ஜீவனாம்சம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். அதாவது அவருடைய மனைவி மாதம் 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார். இதன் காரணமாக ஜீவனாம்சம் கொடுக்க அவர் மறுப்பு தெரிவித்தார். ஆனால் அவருடைய மனைவி தன் கணவர் ஒரு லட்ச ரூபாய் வரை சம்பளம் பெறுவதால் கண்டிப்பாக ஜீவனாம்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இரு தரப்பு  வழக்கறிஞர்களின் வாதத்தையும் கேட்ட நீதிமன்றம் இருவருக்குமான சம்பள விஷயத்தில் வித்தியாசம் இருப்பதால் ஒரு வருடத்திற்கான சம்பள சீட்டுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் இதற்கு முன்பாக மத்திய பிரதேச மாநிலத்தின் உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றம் அந்தப் பெண்ணுக்கு கணவர் ஜீவனாம்சம் வழங்க வேண்டாம் என்று உத்தரவிட்ட நிலையில் அதனை எதிர்த்து பெண் தற்போது உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த வழக்கில் சம்பள சீட்டு விவரங்களை பார்த்த பிறகு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.