மத்திய அரசு மும்மொழி கல்வி கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு நிதி தருவோம் என்று கூறிய நிலையில் இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, எந்த ஒரு மாநிலத்திற்கும் கொள்கை மொழி என்பது தாய் மொழியாக மட்டும் தான் இருக்க முடியும். இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மொழியை கட்டாயமாக கற்க வேண்டும் என்றால் கண்டிப்பாக பல நாடுகள் உருவாகிவிடும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்துள்ளது கொடுங்கோன்மை.

மத்திய அரசுக்கு வரும் நிதியில் பெரும்பான்மையை கொடுப்பது தமிழ்நாடு தான். தமிழ்நாடு மும்மொழி காரணமாக தேசிய கல்விக் கொள்கையை ஏற்காதது வரவேற்கத்தக்க விஷயம்.இந்த பிரச்சனைக்கு தமிழகத்தில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டும் தான் தீர்வு என்பது கிடைக்கும். ஆனால் மத்திய அரசை எதிர்த்தால் அமலாக்க துறை மற்றும் வருமானத்துறை ரெய்டு வரும் என்று பயப்படுகிறார்கள். என்னுடைய வீட்டிற்கு யாரும் ரெய்டு வர முடியாது. ஏனெனில் என்னிடம் ஒன்றுமே இல்லை. மேலும் கரை படிந்திருப்பதால் தான் மாநில அரசு ஆட்சியாளர்கள் தங்களுக்கு பாதகம் வரும் என்கிற காரணத்தால் தான் அவர்களால் மத்திய அரசை எதிர்க்க முடியவில்லை என்று கூறினார்.