
சென்னை மேற்கு வங்கத்தை சேர்ந்த 29 வயது சாகிப், கட்டிட வேலைக்காக சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கி வந்திருந்தார். அவர் போன்று வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 60 பேர் அந்த மண்டபத்தில் தங்கி, அருகில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.
சாகிப்பும் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய கடந்த 1ம் தேதி வந்தார். இந்நிலையில் நேற்று காலை நான்கு மணியளவில், சாகிப்புடன் பணிபுரிந்த 21 வயதுடைய சண்டு பேட்கு என்பவர் திடீரென கத்தியால் சாகிப்பை பலமுறை குத்தி விட்டு தப்பியோடியுள்ளார்.
காயமடைந்த சாகிப், ரத்த வெள்ளத்தில் தவித்த நிலையில், அருகிலுள்ளவர்கள் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை ஆரம்பித்தனர்.
விசாரணையின் மூலம் சென்ட்ரல் பகுதியில் நின்ற சண்டு பேட்குவை கைது செய்த போலீசார், அவரை விசாரிக்கையில் வேலை பிடிக்காத காரணத்தால் சாகிப்பை கொலை செய்ய முடிவு செய்ததாக சண்டு பேட்கு ஒப்புக்கொண்டார்.
சாகிப்பே அவருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தன் கூட பணியாற்ற வைத்திருந்தாலும், ஊருக்கு செல்ல அனுமதிக்காமல், வேலையை தொடரக் கட்டாயப்படுத்தியதால் சண்டுபேட்கு சாகிப்பை கத்தியால் குத்தியது தெரியவந்தது. சண்டு பேட்குவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.