மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷியோபூர் மாவட்டத்தில், தாகமாக இருந்த சிறுத்தைகளுக்கு வனத்துறை ஓட்டுநர் ஒருவர் தண்ணீர் வழங்கிய வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீடியோவில், ஒரு மரத்தின் நிழலில் இருந்த சிறுத்தைகளுக்கு அருகே ஒரு கிராமவாசி கேனில் தண்ணீர் கொண்டு வந்து, தட்டில் ஊற்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன. சிறுத்தைகள் அமைதியாக வந்து தண்ணீரைக் குடிக்கும் இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆனால் பாதுகாப்பு விதிகளை மீறியதாகக் கருதி, ஓட்டுனர் சத்யநாராயண் குர்ஜரை பணி இடைநீக்கம் செய்து வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களில் சிறுத்தைகள் மக்கள் வீடுகளுக்கும், கால்நடைகளுக்கும் நெருக்கமாக வருவதாக புகாருகள் எழுந்தன. குறிப்பாக, பெண் சிறுத்தை தனது நான்கு குட்டிகளுடன் சேர்ந்து ஆடுகளை வேட்டையாடி கொன்ற சம்பவம் தொடர்பாக வனத்துறை கிராம மக்களுக்கு விழிப்புணர்வு அறிவுறுத்தல் வழங்கியது.

இருப்பினும், வனப்பகுதி அருகே உள்ள கிராமவாசிகளும், குர்ஜரின் பணியிடைநீக்கத்தை எதிர்த்து வருத்தம் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு மற்றும் விலங்குகளின் இயற்கை வாழ்வியல் இடையூறு பெறக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வனத்துறை விளக்கமளித்துள்ளது.