
இந்திய ரயில்வே துறையின் விதிமுறைகளின்படி, பயணிகள் தங்களின் லக்கேஜ்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டியது அவசியம். இருப்பினும் ஒரு பயணிக்கு ரூ. 4.7 லட்சம் இழப்பீடு வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது, இது ரயில்வே சட்டத்தின் மீது முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த திலிப் சதுர்வேதி என்பவருக்கு நடந்தது. 9.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொண்ட திலீப்பின் லக்கேஜ் தொலைந்தது. தனது லக்கேஜ் பாதுகாப்பான நிலையில் இருந்ததாகவும், டிக்கெட் பரிசோதகரின் அலட்சியத்தால் திருட்டு நடந்ததாகவும் குற்றம் சாட்டினார். இதனையடுத்து திலீப் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முறையிட்டார்.
இந்த வழக்கில், தென் கிழக்கு மத்திய ரயில்வே, திலீப் சதுர்வேதிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், ரயில் நிலையப் பொறுப்பாளர்கள் மேல்முறையீடு செய்தனர். திலிப் சதுர்வேதி தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு சென்றார். முன்பதிவு செய்யாத நபர்கள் அங்கு வந்ததால் தான் சங்கிலியால் கட்டப்பட்ட தனது லக்கேஜ் திருடு போனதாக திலீப் குறிப்பிட்டார்.
இந்த நிலையல் ரயில்வே சட்டத்தின் 100-வது பிரிவு குறிப்பிடுவது என்னவென்றல், ரயில்வே ஊழியர் லக்கேஜை முன்பதிவு செய்து, ரசீதை பயணிகளுக்கு கொடுக்காத வரை, ரயில்வே நிர்வாகம் எந்த லக்கேஜுக்கும் பொறுப்பாகாது. அதுவரை அந்த லக்கேஜ் பயணிகளின் பொறுப்புதான். ஆனால் பயணியின் லக்கேஜ் ரயில்வே துறையின் அலட்சியத்தால் தவறினாலோ, சேதமானாலோ, திருடப்பட்டாலோ ரயில்வேதான் பொறுப்பேற்க நேரிடும். இதனை அடிப்படையாக வைத்து தேசிய நுகர்வோர் ஆணைய நீதிபதி 4.7 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க ரயில்வே துறைக்கு உத்தரவிட்டார்.