
கர்நாடகா மாநிலம் தாவணகெரே நியாமதி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கி கொள்ளை வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வங்கி கொள்ளையில் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் அஜய்குமார் மற்றும் விஜய்குமார் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அனைத்தும் நியாமதி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு அக்டோபரில், வங்கியின் ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், வங்கியில் வைக்கப்பட்டிருந்த நகைகளை திருடிச் சென்றனர்.
கர்நாடகா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக நியாமதி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கடந்த 6 மாதங்களாக விசாரணை நடத்தி வந்தனர். இருந்தும் எந்த தடமும் கிடைக்காமல் காவல்துறையினர் பிரச்சனையில் சிக்கிய நிலையில், நியாமதியில் இயங்கிய ஒரு பேக்கரி சந்தேகத்திற்கு இடமளித்தது.
பேக்கரி உரிமையாளர் மீது போலீசார் சந்தேகமடைந்து விசாரணை நடத்தியதில், வங்கி கொள்ளையின் பின்னணி தெரியவந்தது. பேக்கரி உரிமையாளர் விஜய்குமாரே இந்த கொள்ளைக்கு முழு திட்டத்தை வகுத்துள்ளார்.
இவர் வங்கியில் கடன் கேட்டு நிராகரிக்கப்பட்டதால் சகோதரர் அஜய்குமாருடன் சேர்ந்து உள்ளூர் நபர்களை கூட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட ஆறு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நகைகள் மீட்கப்பட்ட செய்தி, கர்நாடகா போலீசாருக்கு பெரும் வெற்றியாக கருதப்படுகிறது.