
திருச்சி மணப்பாறையில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் 4-ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி தாளாளரின் கணவர் வகுப்பறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியை குழந்தையின் உறவினர்கள் சூறையாடினர்.
இது தொடர்பான புகாரின் பேரில் தனியார் பள்ளி தாளாளரின் கணவர் வசந்தகுமார் (54) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்தான் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். உறவினர்கள் பள்ளியில் ஜன்னல் கண்ணாடியை உடைத்து சூறையாடிய நிலையில் திடீரென இரவு நேரத்தில் சாலையிலும் அமர்ந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகி வசந்தகுமார், தலைவர் மராச்சி, தாளாளர் சுதா, துணை தாளாளர் இளஞ்செழியன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் பள்ளியின் முதல்வர் ஜெயலட்சுமி தானாகவே சென்று காவல் நிலையத்தில் சரண் அடைந்து விட்டார்.
மேலும் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லைகொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்திய போது மேலும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.