தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கு கடல் பகுதிகளில் இன்று காலை 5:30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 8:30 மணிக்கு தென்கிழக்கு வங்கு கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளின் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த இரண்டு நாட்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்.

அதனை தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஜனவரி 31-ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அதன் பின் பிப்ரவரி 1-ம் தேதி இலங்கை கடற் பகுதிகளை சென்றடையும். இதனால் ஜனவரி 29,30,31 ஆகிய தேதிகளில் வடகடலோர  மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் ஜனவரி 27-ஆம் தேதி தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி போன்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஒரு சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும். இதனையடுத்து தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.