வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் வட மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவான நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில்  மழைக்கு வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதன்படி மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், தேனி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 3 தினங்களில் மேற்கு வட மேற்கு திசையில், மேற்கு வங்காளம், வடக்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் நாளை முதல் வருகிற 13-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது