
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தென்மலை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஆன பினீஷ்(23) நேற்று முன்தினம் புனலூருக்கு சென்றுள்ளார். மீண்டும் நள்ளிரவில் தென்மலை செல்வதற்காக புனலூர் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது மது போதையில் இருந்தார். பேருந்துக்காக காத்திருந்த அவரிடம் அங்கு இருந்தவர்கள், இரவு நேரத்தில் தென்மலைக்கு பேருந்து சேவை கிடையாது, காலையில் தான் செல்ல முடியும் என தெரிவித்துள்ளனர்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பேருந்து நிலையத்தின் அருகே போக்குவரத்து பணிமனை இருந்த நிலையில் அங்கு இடம் பற்றாக்குறை காரணமாக இரவு நேரங்களில் பேருந்துகளை சாலையோரம் ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர். பேருந்து நிலையத்தின் அருகே ஒரு அரசு பேருந்து நிற்பதை பார்த்த பினிஷ், உடனே அவர் அந்த பேருந்தில் ஏறி அதனை வீட்டை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார்.
புறப்பட்ட அவசரத்தில் அவர் முகப்பு விளக்கை எரிய வைக்க மறந்துவிட்டார். சிறிது தூரம் சென்றபோது போலீசார் வாகன சோதனையில் முகப்பு விளக்கு இல்லாமல் ஒரு அரசு பேருந்து வருவதை பார்த்து சந்தேகம் அடைந்து பேருந்தை நிறுத்த கூறியுள்ளனர். போலீசாரை கண்டதும் அவர் பேருந்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் போலீசார் அவரை மடக்கி பிடித்து அவரிடம் விசாரித்த போது வீட்டுக்கு செல்ல வாகன வசதி இல்லாததால் அரசு பேருந்தை கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.