சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரில் உள்ள பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிட பணியில் தீனதயாளன் (24) என்பவர் மேஸ்திரியாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் மூன்று பேர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அங்கு வேலை செய்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன்கள் மற்றும்  ரூ. 13,000 ரொக்கம் ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பித்துச் சென்றனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் மேஸ்திரிடம் கூறினர். பின்னர் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததோடு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது மணிகண்டன்(33), கர்ணா(25), அஜித்(23) ஆகிய மூவர் என கண்டறியப்பட்டது. அவர்களிடம் இருந்து 6 செல்போன்கள் மற்றும் பட்டாக்கத்திகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்த நிலையில், பின்னர்   நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தி சிறையில் அடைத்தனர்.