
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதோடு அப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் வனப்பகுதிகளில் செத்து கிடப்பது மீட்பு பணியினரால் கண்டறியப்பட்டது. அதன்படி போத்துக்கல் பகுதியில் உள்ள சாலியாற்றில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகமானதால் மான்கள் அடித்து செல்லப்பட்டு தப்ப முடியாமல் இறந்து கிடந்தன.
இதைத் தொடர்ந்து ஆற்றை கடக்க முயன்ற 3 காட்டு யானைகள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு ஆற்றில் இருந்து மீண்டு வெளியே வர முடியாமல் தவித்தன. அதில் 2 யானைகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பின.
இதனை அடுத்து திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி பக்கத்தில் சாலக்குடி ஆற்றில் காட்டு யானை ஒன்று செத்து கரை ஒதுங்கி இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர் யானையின் உடலை அகற்றுவதற்கான பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த நிலச்சரிவால் மக்கள் மட்டுமல்லாமல் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.