கர்நாடக மாநிலம் சிவமொக்கா பகுதியைச் சேர்ந்த 45 வயதான குமார், சிறு வயது முதல் வயிற்று பசிக்காக கிடைத்த வேலையை செய்து வந்தார். பின்னர் மெக்கானிக் வேலை கற்றுக்கொண்டு, கடைகளில் பணிபுரிந்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். ஆனால், சிறு வயதில் பசித்த போது, உணவிற்கு பணம் இல்லாததால் வாகனங்களில் பயன்படுத்திய பழைய ஆயிலை குடிக்கத் தொடங்கினார்.

நாளடைவில், பழைய ஆயிலை குடிப்பது குமாருக்கு ஒரு பழக்கமாக மாறியது. இது குறித்தாக அவர் கூறியதாவது, “நான் ஆயிலை குடிப்பதை சிலர் அதிசயமாக பார்க்கின்றனர். பல முறை அவர்களுக்கு நேரடியாக காட்டி, ஆயிலை குடித்துப் பார்த்துக்கொண்டேன். இதைக் கண்ட சிலர் என்னுடைய நிலையை புரிந்து கொண்டு, உதவியாக பணம் கொடுத்துள்ளனர்” என்றார். இருசக்கர வாகனங்களுக்கு பயன்படுத்திய ஆயிலை கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து மூன்று வேளையும் குடித்து வருவதாகவும், உணவோ, குடிநீரோ எதையும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.

அதுபோல், கடந்த 13 வருடங்களாக சபரிமலைக்கு நடந்து சென்று வருகிறார் என்றதும், இது பொதுமக்களில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. அவரின் நலனைக் கருத்தில் கொண்டு, அவரை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.