
கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு அருகே மெட்டுவாவி கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான குப்புசாமி என்பவரை சொத்துக்காக அவரது மனைவியும் மகன்களும் சேர்ந்து கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தில் சொத்து பிரிப்பு விவகாரத்தில் கடந்த சில நாட்களாக தகராறு நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் வாக்குவாதம் கடும் தகராறாக மாறியது. இதையடுத்து, குப்புசாமியை அங்குள்ள தோட்டம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று, அவரது கை, கால்களை கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.
தாக்குதல் செய்யப்பட்ட குப்புசாமி பலத்த காயங்களுடன் அந்த இடத்திலேயே சாய்ந்தார். இதை பார்த்த ஒருவர் அவரை காப்பாற்ற முயன்றாலும், அவரையும் மகன்கள் தாக்கி விரட்டினர். அதுமட்டுமல்லாமல், கம்பை எடுத்து மனைவி தனது கணவரை தாக்கியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“என்னையே அடிக்கிறீயா?” என அதிர்ந்த குப்புசாமியின் குரலும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கொடூரக் காட்சி அருகாமை பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார்.
தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே பெரும் கோபமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து குப்புசாமி நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவம் குறித்த விசாரணையை தொடங்கி, தற்போது அவரது இரு மகன்களையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.