கர்நாடகாவின் முன்னாள் போலீஸ் இயக்குநர் ஜெனரல் (DGP) ஓம் பிரகாஷை அவரது மனைவி பல்லவி கத்தியால் 8 முதல் 10 முறை வரை குத்தி கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை 5 மணியளவில் ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் உள்ள அவரது வீட்டில், முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்த பக்கத்து வீட்டுகாரர் அவரை ஸெயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.

போலீசார் கூறியதாவது, கடந்த சில நாட்களாகவே ஓம் பிரகாஷ் மற்றும் அவரது மனைவி பல்லவிக்குள் கடுமையான வாக்குவாதம் மற்றும் சண்டைகள் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில்  ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் வாட்ஸ்அப் குழுவில் பல்லவி ஒரு செய்தியைப் பகிர்ந்திருந்தார். அதில், “என் கணவர் துப்பாக்கியை என் தலையில் வைத்துப் மிரட்டியுள்ளார்” எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் ஓம் பிரகாஷின் மகன் கார்த்திகேஷ் போலீசில் அளித்த புகாரில், “என் தாயார் என் தந்தையை கொல்வதாக கடந்த வாரம் முழுவதும் மிரட்டினார். இதனால் என் தந்தை தனது சகோதரி சரிதா குமாரி வீட்டில் தங்கினார்.

ஆனால், இரண்டு நாட்களுக்கு முன் என் தங்கை க்ருதி அங்கே சென்று அவரை மிரட்டி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார்,” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, “நான் டொம்லூரில் உள்ள கர்நாடகா கோல்ஃப் சங்கத்தில் இருந்தபோது பக்கத்து வீட்டுக்காரர் என்னை அழைத்து, என் தந்தை கீழே விழுந்துள்ளதாக கூறினார். உடனே ஓடிப் போனபோது, என் தந்தை பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அருகில் உடைந்த பாட்டிலும், கத்தியும் இருந்தன.”

தற்காலிகமாக பல்லவி மற்றும் க்ருதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த கொடூர கொலைக்கான முழுமையான உண்மை விரைவில் வெளியாகும் என கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்தார்.